கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து வரும் திங்கட்கிழமை தவெக தலைவர் விஜய், சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டு, இறந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். சில நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்டோரிடம் வீடியோ காலில் பேசிய விஜய், நேரில் வருவதாக அவர்களிடம் கூறியிருந்தார். தொடர்ந்து, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் 20 லட்சம் ரூபாய், அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த விஜய், சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து , கரூரில் உள்ள மண்டபத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க விஜய் திட்டமிட்டதாக கூறப்பட்டது. ஆனால் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் நீடித்ததாக தவெக தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், பாதிக்கப்பட்டோரை சந்திக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து இந்த சந்திப்பை வரும் திங்கட்கிழமை நடத்தத திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் துயரம் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு அதாவது அக்டோபர் 27ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.