0 0
Read Time:3 Minute, 16 Second

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் இந்திய தூதர் பிரமிதா திரிபாதி குவைத் அதிகாரிகளை சந்தித்ததாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘உயிரிழந்தவரின் உடலை இந்தியா கொண்டு வருவது’தொடர்பாக குவைத் அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

குவைத் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ‘இரான் நடத்திய தாக்குதலால் நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமந்தது. இதில் இந்திய குடிமகனான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோனிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

36 வயதான சந்தான செல்வத்திற்கு திருமணமாகி ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குவைத்தில் உள்ள பொறியியல் பொதுவர்த்தகம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு மேலாக எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருவதாக அவரது மனைவி கௌசல்யா தெரிவித்தார்.

சந்தான செல்வம் இருந்த இடத்தின் மீது ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். இன்று காலை பணியாற்றும் நிறுவனத்திலிருந்து தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %