மயிலாடுதுறையில் உள்ள காவேரி துலாக் கட்டம் மிகவும் புனிதமும், பெருமையும் மிகுந்த இடமாகும். இவ்விடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும், கங்கை முதல் அனைத்து வட இந்திய நதிகளும் வந்து தங்களை புனித படுத்திக் கொள்வதாக ஐதீகம். கங்கையின் பாவத்தை போக்கிய காரணத்தினால் கங்கையை விட சிறப்பான நதி காவேரி அதிலும் மயிலாடுதுறை துலா கட்டம் மிகவும் சிறப்புமிக்கது என்பது மிகப் பெருமையாகும். அப்படிப்பட்ட துலாக் கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் துலா உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழாவில் பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆன்மீக அன்பர்கள், சன்னியாசிகள், துறவிகள், மற்றும் தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீன குருமகா சன்னிதானங்கள் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட பெரியவர்கள் ஆன்மீக அன்பர்கள் நூற்றுக்கணக்கானோர் புனித நீராட கூடும் இடம் இந்த மயிலாடுதுறை காவேரி துலாக் கட்டமாகும். இந்த துலா உற்சவ விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நகராட்சிக்கு தரைக் கடைகள் மற்றும் பொருட்காட்சிகள் வாயிலாக லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. இந்த நிலையில் துலாக் கட்டத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு நகராட்சியினுடையது ஆகும். ஆனால் அதனை செய்யாமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கின்றது.
ஒவ்வொரு முறையும் பிரச்சனைகள் ஏற்படுகின்ற பொழுது பலமுறை கோரிக்கை வைத்து போராடிய பின்பு தான் சீரமைக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இவ் விஷயத்தில் முன்கூட்டியே தாமாக முன்வந்து நகராட்சி கவனம் செலுத்துவதே இல்லை. தற்பொழுது விழா துவங்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் துலா கட்டத்தில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். தடுமாறி கீழே விழுகிறார்கள்.
நகராட்சி ஆணையர் இல்லமும் மிக அருகில் உள்ள நிலையில் இப்படிப்பட்ட பிரச்சனைகளை கண்டும் காணாமல் போவது வருத்தம் அளிக்கிறது. விரைவில் துலா உற்சவம் நடைபெற உள்ளதால் உடனடியாக துலா கட்டத்தில் உள்ள பள்ளங்களை சிமெண்ட் கான்கிரீட் மூலம் சீரமைத்து தரவும், சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் தொடர்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், அப்பகுதியில் பொதுமக்களுக்கு நிரந்தர கழிவறை வசதி ஏற்பாடு செய்து தரவும், உயர் கோபுர ஹமாஸ் விளக்கு அமைத்து தரவும் துலா கட்ட பாதுகாப்பு கமிட்டி சார்பில் சமூக ஆர்வலர் மயிலாடுதுறை அ.அப்பர் சுந்தரம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.