தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கி அரசியலில் காலடி எடுத்து வைத்த விஜய், தற்போது கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க தற்போது அனைவரது கவனமும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு குறித்துதான் இருக்கிறது. அந்த வகையில் விஜய் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.
செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகவுள்ள நிலையில் அந்த மாதிரி இறுதியில் மாநாடு நடத்த விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்பதும் விஜய்யின் விருப்பமாக உள்ளது. 10 லட்சம் தொண்டர்கள் வந்து போகவும் அவர்களுக்கு உணவு வழங்கவும் என கிட்டத்தட்ட 60 ஏக்கரில் இடம் தேவைப்படுகிறது.
இதற்காக முதலில் மதுரையில் இடம் பார்க்கப்பட்டது. பின்னர் சேலத்தில் தலைவாசல், காக்காபாளையம் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் இடம் பார்க்கப்பட்டது. இந்த இடங்களை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தே நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆனால் இந்த இடங்களும் போதாது என தற்போது திருச்சியில் இடம் பார்க்கப்பட்டு வருகிறது.
இதற்காக திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வேவுக்கு சொந்தமான மைதானத்தில் அனுமதி கேட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனிடம் கடந்த மாதம் 31-ம் தேதி புஸ்ஸி ஆனந்த் கடிதம் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டப்படவே மீண்டும் 1-ம் தேதி தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 20, 23-ம் தேதிகளில் 60 ஏக்கர் இடம் தங்களுக்கு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் எந்த தேதியில் நடத்துவீர்கள் என்று குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே அனுமதி கொடுப்பது குறித்து ரயில்வே வாரியம் தரப்பில் பரிசீலிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தை அளவிடும் பணி நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே அந்த இடம் சிட்டி லிமிட்டில் வருவதால் போலீஸ் அனுமதி கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் அந்த மைதானம் 8 ஏக்கர் மட்டுமே இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்றும் அந்த இடத்தில் மாநாடு நடத்தப்பட்டால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் மாநாடு நடத்துவதும் கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு பக்கம் மாநாடு நடத்த தவெக தரப்பில் இன்னும் இடத்தை தேர்வு செய்யவில்லை என கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் தவெக கேட்கும் இடங்களில் வேண்டுமென்றே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் மாநாடுக்கு முன்பே விஜய்க்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் விஜய்க்கு அழுத்தம் ஏற்படுவதாக செய்தி வெளிவந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கோபத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த திட்டம் இட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.