“தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும்” என விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், அதனை எதிர்கொள்வதற்கான பணிகளை பிரதான கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்கிறது.
இதற்கான பணிகளையும் அக்கட்சி துரிதப்படுத்தி வருகிறது. பதிவு செய்யப்பட்ட, அதேசமயம் அங்கீகரிக்கப்படாத கட்சியாக தவெக இருக்கும் சூழலில், தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தது.
விசில், கிரிக்கெட் மட்டை, ஆட்டோ போன்ற விருப்ப சின்னங்களை தவெக பட்டியலிட்டு, அதில் ஒன்றை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பொது சின்னமான விசில் சின்னத்தில் தவெக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்
இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.
இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில்.
அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.