தமிழ்நாட்டில் 78.09 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 78 விழுக்காடு மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், சுமார் 5 கோடி வாக்காளர்களுக்கு இதுவரை எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிகாரை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக எஸ்.ஐ.ஆர் என்கிற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய பணிகள் வரும் 4ஆம் தேதி நிறைவடையவுள்ளன. இந்நிலையில் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர் படிவ விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 78.09 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, சுமார் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள தமிழ்நாட்டில், சுமார் 5 கோடி பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரைக் கோடி வாக்காளர்கள் உள்ள மேற்கு வங்கத்தில் சுமார் 88 சதவிகிதம் பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.