மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் தியேட்டர்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் தியேட்டர்களில் அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பகங்களில் சிறுநீர் கழிப்பதற்கு சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள சிறுநீர் தொட்டிகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றிற்கு இடையே எவ்வித மறைப்பும் தடுப்பும் இல்லாததால் கூட்டமாக பெரியவர்கள், இளைஞர்கள் சிறுநீர் கழிக்கும் போது இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் சிரமமும், மனரீதியான பாதிப்பும் ஏற்படுகிறது. ஆகவே அனைத்து சிறுநீர் தொட்டிகளுக்கும் இடையே மறைப்பு மற்றும் தடுப்பு அமைக்கப்பட வேண்டும். ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பதங்களில் இத்தகைய மறைப்பு அல்லது தடுப்பு அமைப்பு அனைத்து கல்லூரி, பள்ளிகள், ஹோட்டல்கள், அலுவலகங்களிலும் இல்லை என்பது தற்பொழுது விசாரணையின் அடிப்படையில் தெரிய வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலம் கருதி உடனடியாக அனைத்து பள்ளிகள் மற்றும் தியேட்டர்களில் இப்படிப்பட்ட அமைப்பினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் பள்ளி கல்லூரிகளில் உள்ள பெண் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தமும் சுகாதாரமாகவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். போதுமான அளவிற்கு தண்ணீர் வசதி குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொது கழிவறைகளை சுகாதார நலன் கருதி மிக சுத்தமாக அமைத்துக் கொள்ள அதிக அளவிலான தண்ணீர் வசதி செய்து தரப்பட வேண்டும். தொடர்ந்து டாய்லெட் ஆசிட், பிலீசிங் பவுடர் போன்றவற்றைக் கொண்டு தினம்தோறும் தூய்மை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும், இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மாணவர்கள் நலம் கருதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.