செம்பனார்கோவில், ஏப்ரல்- 03;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி மயிலாடுதுறை மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் சிவஸ்ரீன் சிலம்பாலயம் இணைந்து 2022- 23 ஆண்டுக்கான மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் விதிமுறைகளின்படி சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு, கட்டைக்கால் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து குமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என மயிலாடுதுறை மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் சிவஸ்ரீன் சிலம்பாலய பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில், கலைமகள் கல்வி குழும தாளாளர் எஸ்.நெடுஞ்செழியன், மருத்துவர் எஸ்.வீரபாண்டியன், மயிலாடுதுறை மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழக பொறுப்பாளர் ஜலேந்திரன், மயிலாடுதுறை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் கணேசன், செயலாளர் சத்யானந்தன் சிலம்பாட்டப் போட்டியின் அமைப்பாளர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகளை, நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமான பார்வையாளர்கள் சிலம்பாட்டத்தைக் கண்டுகளித்து கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.