0 0
Read Time:5 Minute, 41 Second

கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் அனுமதி அளவை மீறி மக்கள் திரண்டதால் நெரிசல், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது.

அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., மருத்துவத் துறைச் செயலாளர், ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், கரூர் பிரச்சாரத்தில் நடந்த விவரங்களை அங்கு பதிவான வீடியோக்களை ஒளிபரப்பி விளக்கம் அளித்தனர்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக இன்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அரசு தரப்பில் இருந்து வீடியோக்கள் மூலம் அங்கு என்ன நடந்தது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமுதா ஐ.ஏ.எஸ்., “வேலுசாமிபுரம் வேண்டும் என தவெக தரப்பில் இருந்து காவல்துறையிடம் அனுமதி கோரி வாங்கப்பட்டது. 25ஆம் தேதி ஒரு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 10 முதல் 15 ஆயிரம் பேர் கொண்டு பிரச்சாரம் நடத்திய வேலுசாமிபுரத்தை கொடுங்கள் என த.வெ.க.வினர் 26ஆம் தேதி கேட்டனர். அதன்பிறகு காவல்துறையும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

முதலில் அவர்கள் கேட்டது லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி. அங்கு ஒரு பக்கம் பெட்ரோல் பங்கும் மறுபக்கம் வடிகால் கால்வாயும் இருக்கிறது. அந்த இடத்தில் அனுமதி கொடுத்து அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது என அந்த இடத்தை காவல்துறை மறுத்துள்ளது.

அதன்பிறகு உழவர் சந்தை பகுதி கொடுத்தார்கள். அது வெறும் 30 அடி அகலம் கொண்டது. அதே வேலுசாமிபுரம் என்பது 60 அடி அகலம் கொண்டதாக இருந்தது. அதனால், அது தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் 6 மணி போல் தான் பிரச்சார இடத்திற்கு வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரது வாகனம் நகர முடியவில்லை. அதன் காரணமாக காவல்துறையினர் கூட்டத்தை விலக்கி விட்டனர். தடியடி நடத்தப்படவில்லை.

கரூரில் 3 மணிக்கே சுமார் 20 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அவர்கள் அனுமதி கடிதத்தில் சொல்லி இருந்தது 10 ஆயிரம் பேர் என்பதுதான். ஏற்கனவே அங்கிருந்த கூட்டம், அதுபோக விஜய் வண்டியோடு சேர்ந்து அங்கு வந்த கூட்டம் என அனைவரும் அங்கு கூடினர். அதிக நேரம் காத்திருந்ததால், மக்களுக்கு நீர்ச்சத்து குறைப்பாடு ஏற்பட்டது.
அவரது வண்டி சற்று பெரியது. அந்த வண்டி உள்ளே வரும்போது முன் இருப்பவர்கள் பக்கவாட்டை நோக்கி நகர்வார்கள். அப்படி நகரும்போதுதான் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மின் துண்டிப்பு செய்யவில்லை. கூட்டம் அதிகரித்து ஜெனரேட்டர் வைத்திருந்த இடத்திற்குள் சென்ற பிறகுதான் அங்கிருந்த லைட்கள் மட்டும் அணைந்தன. மற்ற இடங்களில் எல்லாம் லைட் எரிந்து கொண்டிருந்தன.

விஜய் பேசும்போது முதலில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அவசர ஊர்திதான் சென்றது. அதன்பிறகுதான் மக்கள் கீழே விழுவதைப் பார்த்த காவல்துறை முதலில் செல்போன் மூலமாக லோக்கல் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், சிக்னல் கிடைக்காததால், பிறகு மைக் (வைர்லஸ்) மூலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அங்கிருந்த மருத்துவமனைகளில் இருந்து அவசர ஊர்திகளை வரவழைத்துள்ளனர். இரவு 7.17 முதல் 9.45 வரை மீட்புப் பணிகள் நடந்தன. சமூகவலைதளங்களில் கருத்துகளை சொல்லலாம். ஆனால், தவறான செய்தி பரப்பினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் கூறியதாவது; “தவெக தரப்பில் 7, அரசு தரப்பில் 6, தனியார் மருத்துவமனை தரப்பில் 33 ஆம்புலன்ஸுகள் சென்றன” எனத் தெரிவித்தார்.

ஏடிஜிபி டேவிட்சன் கூறியதாவது; “50 நபர்களுக்கு ஒரு காவலர் என பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால் கரூரில் 20 நபர்களுக்கு ஒரு காவலர் என பாதுகாப்பு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %