0 0
Read Time:4 Minute, 39 Second

கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். ஆதவ் அர்ஜுனா 29 மணி நேரம் பின் எக்ஸ் பக்கத்தில் துயரமான பதிவு வெளியிட்டார்.

கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 29 மணி நேரத்துக்கு பின் இந்த சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று இரவு பரப்புரை மேற்கொண்டார். எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேர் தங்களது இன்னுயிரை இழந்தனர். ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா இருவரும் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளனர். ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணி மற்றும் அவருடைய மகள் தரணிகா நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரா, அருக்காணி, 10 வயது சிறுவன் பிரித்திக் ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா எந்த விளக்கமும் தரவில்லை. இந்த நிலையில் சம்பவம் நடந்த 29 மணி நேரங்களுக்கு பின் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பெரிய பதிவை இட்டுள்ளார்.
அதில், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள்.

இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.” என்று பதிவிட்டு அதனுடன் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!’ என்கிற மகாபாரத வரிகளையும் கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %