சென்னையில் 13 நாட்களாக போராட்டம் செய்த தூய்மை பணியாளர்கள், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். அரசியல் தலைவர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னையில் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 இல் தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே, போராட்டம் நடத்திவரும் தூய்மை பணியாளர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு சென்னையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறியதோடு, தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, வரும் 31 ஆம் தேதிக்குள் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டுமெனக் கூறினார்.
இருப்பினும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் இருந்து இறங்கி நடந்து சென்றதை காணமுடிந்தது.
இதனையடுத்து நேற்றிரவு ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த காவலர்கள், தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் காவலர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்ட களத்தில் இருந்து விலகி செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக காவலர்கள் தூக்கி சென்றனர். காவலர் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போது பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. தூய்மை பணியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அரசு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.