சிவகங்கை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக சிவகங்கை மாவட்டம் செல்கிறார். அங்கு காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்
காந்தியின் 79வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காந்தியடிகளின் சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். பிறகு பொது மக்கள் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கவுள்ளார். பிறகு விமானம் மூலம் மதியம் மதுரை சென்று அங்கிருந்து சிவகங்கை செல்லவுள்ளார்.
ஸ்டாலின் சிவகங்கை விசிட் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரியவுள்ளார். சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மாகாந்தி, கம்யூனிஸ்ட் இயக்கத் தோழா் ப. ஜீவா ஆகியோர் திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் சந்தித்து பேசினர். அதன் நினைவாக அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். அப்போது அவரின் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார். பின்னர், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளா்ச்சித் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீறுகவியரசா் முடியரசனாரின் திருஉருவச் சிலையை திறந்துவைக்க உள்ளார். இரவு அரசு விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கிறார்.
நாளை ஜனவரி 31 ஆம் தேதி சனிக்கிழமை காலை காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். அதேபோல கழனிவாசல் பகுதியில் சுமார் ரூ. 100 கோடியில் கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தையும் முதலமைச்சர் திறந்துவைக்கவுள்ளார்.
இதையடுத்து ரூ. 13.36 கோடி மதிப்பில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 2,559.50 கோடி மதிப்பில் 49 நிறைவடைந்த திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். அந்த அரசு விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ. 205.06 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இறுதியாக கழனிவாசல் பகுதியில் ரூ. 32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது ஸ்டாலின் சர்ப்ரைசாக சிவங்கை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிவகங்கை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நாளை மதியம் அவர் சென்னை புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.