கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி, திட்டமிட்டு பிரச்சனை ஏற்பட்டதாக எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு கூட்டத்தில் கூறினார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரச்சாரம் இன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் உள்ள பொது இடத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இரண்டு முறை தள்ளிப்போன பிறகு மூன்றாவது முறையாக இன்று திருச்செங்கோடு நகரத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
முதல் முறை மழையின் காரணமாக கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் ஒரு நிகழ்ச்சியின் காரணமாக நீதிமன்ற உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு பின் பொது இடத்தில் நான் செய்யும் முதல் பிரச்சாரக் கூட்டம் இந்தத் திருச்செங்கோடு கூட்டம்.
பக்கத்தில் கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த சம்பவம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்தப் பிரச்சனை உருவாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் நம் கூட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிக்கொண்டிருக்கின்றனர்” என பேசினார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சார பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது குறித்து திருச்செங்கோடு கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அது திட்டமிட்டு நடத்தப்பட்ட பிரச்சனை என தகவல் வருகிறது என பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
அதேபோல், கரூர் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கு விசாரணையில், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பிரச்சாரங்களுக்கு அனுமதியை ரத்து செய்தது நீதிமன்றம். இதனையடுத்து இன்று திருச்செங்கோடு பகுதியில் பொது இடத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.