விஜய் பரப்புரை வாகன விபத்து வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்ப, காவல்துறை ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து வாகன பறிமுதல் திட்டமிட்டுள்ளது.
விஜயின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், வாகனத்தை பறிமுதல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதில், கரூரில் நடந்த அசம்பாவிதத்தில் மொத்தம் 41 நபர்கள் பலியாகினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு விசாரிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி தவெக மீதும், அதன் தலைவர் விஜய் மீதும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதில் குறிப்பாக தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்துவந்த இரு சக்கர வாகனங்கள் அந்த வாகனத்தின் முன் சக்கரத்தின் அருகே விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும், ஏன் அவரது பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யவில்லை என்றும் நீதிபதி செந்தில் குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து, 2 மணிநேர வீடியோ காட்சிகள், 30-க்கும் மேற்பட்ட செல்போன்களில் பதிவான வீடியோக்களை காவலர்கள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, விஜயின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது கரூர் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விஜயின் பரப்புரை வாகனத்தையும் பறிமுதல் செய்ய காவல்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.