0 0
Read Time:3 Minute, 45 Second

முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் தீவிரம் காட்டிவருகின்றன.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்ய தனிப்படை காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ எனும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பிற்கு பிற்பகல் 12 மணிக்கு விஜய் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்திருந்தார். மேலும், தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவிடப்பட்டது.
இந்தச் சூழலில், விஜய் அன்று இரவு 7.30 மணி அளவுக்கு கரூர் வேலுசாமிபுரத்தை வந்தடைந்தார். இதனால், நேரம் கூட கூட, தவெக தொண்டர்கள், மக்கள், விஜய் ரசிகர்கள் என ஏராளமானோர் அங்கு கூட துவங்கினர். இதன் காரணமாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்ததும், அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா என அனைவரும் அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறையினர் என். ஆனந்த், நிர்மல் குமார், கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த இவர்களில் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகர செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகிய இருவரையும் கைது செய்ய மத்திய மண்டல காவல்துறையின் தலைவர் ஜோஷி நிர்மல் குமார், மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து மூன்று தனிப்படையினரும், இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %