சங் பரிவார்களின் சதி வலையில் தவெக தலைவர் விஜய் சிக்கி உழல்வதையே அவரது வீடியோ உறுதிப்படுத்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் தனது வீடியோவில் முதலமைச்சர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளதாக கூறினார்.
நடந்த துயரத்திற்கு விஜய் வருந்துவதாக தெரியவில்லை என்றும், உண்மையை அவர் உணர்ந்திருந்தாலும் அதனை திட்டமிட்டே மறைத்து திசை திருப்ப முயற்சிக்கிறார் என்பதில் இருந்து உயிர் பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் சாடினார்.
திமுகவுக்கு எதிரான வெறுப்பு அரசியலைப் போதிப்பதை துணிந்து செய்பவர்களின் கோரப்பிடியில் அவர் சிக்கியுள்ளார் என்றே உணரமுடிகிறது என குறிப்பிட்டுள்ள திருமாவளவன், ‘பாஜக சொல்வதையே விஜய்யும் சொல்கிறார்’ என்று பாஜக மேலிடம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவைச் சார்ந்த அனுராக் தாகூர் கூறுவதிலிருந்தே, அவர் யார் பிடியில் சிக்கி உழலுகிறார் என்பதை அறியமுடிகிறது என்றார்.
தமிழ்நாட்டை பாஜக குறிவைத்து வெளிப்படையாகவே தங்களின் சித்துவிளையாட்டைத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் விஜய், ‘பாஜகவினரின் கருவிதான்’ என்பதையும் இவை உறுதிப்படுத்துகின்றன என்றும் விமர்சித்த திருமாவளவன், தமிழ்நாட்டு மக்கள் இத்தகு சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
அரசியல் சதிகளை முறியடிக்க அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு நிற்கவேண்டியது தவிர்க்க முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.