சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால், தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திருவள்ளூா், ராணிபேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டிருக்கிறது. வடக்கு ஆந்திரா, தெலங்கானா வாயிலாக மகாராஷ்டிரா நோக்கி செல்கிறது. மழை இல்லையென்றாலும், ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பின் மீண்டும் வெப்பநிலை சற்று அதிகரிக்கலாம்.
மேலும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக சென்னை மாவட்டம் மணலியில் 60 மி.மீ.மழை பதிவானது. செங்குன்றம் – 40 மி.மீ., நீலகிரி அழகரை எஸ்டேட், திருவள்ளூா் புழல் ஏஆா்ஜி, புழல், மணலிபுதுநகரம் ஆகிய பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவானது.