0 0
Read Time:6 Minute, 12 Second

அன்புமணி ராமதாஸின் ‘தமிழக உரிமை மீட்பு பயணம்’ காவல்துறை தடை விதிக்கவில்லை என்று டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்ததாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். மேலும் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும் என்றும் கூறியிருக்கிறார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையேயான பூசல் எப்போது முடிவுக்கு வரும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், அதற்கு மாறாக இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் மாநாட்டுக்கான வேலைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வரும் சூழலில், அன்புமணி, “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்கிற தலைப்பில் நடைப்பயணத்தை அறிவித்தார்.

ராமதாஸின் பிறந்த நாளில் தொடங்கி 100 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்து நவம்பர் ஒன்றாம் தேதி தருமபுரியில் நிறைவடையும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டது. இதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அன்புமணியின் நடைபயணத்தால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என குற்றம்சாட்டி இருந்தார். இருப்பினும், திருப்போரூரில் அன்புமணியின் நடைபயணத்துக்கு மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ராமதாசின் பிறந்தநாளான நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தனது நடைப்பயணத்தை அன்புமணி தொடங்கினார். கந்தசாமி கோயிலில் தரிசனம் செய்த அன்புமணி, நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது நடைப்பயணத்தை தொடங்கினார். பொதுக்கூட்ட மேடை மற்றும் பேனர்களில் ராமதாஸின் படம் இடம்பெற்றிருந்தது.

இரண்டாம் நாளாக இன்று, செங்கல்பட்டு, உத்தரமேரூர் தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ளவிருந்தார் அன்புமணி. இந்நிலையில், அன்புமணியின் நடை பயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களுக்கு தமிழக டி.ஜி.பி., கடிதம் எழுதினார். அதில், அன்புமணியின் உரிமை மீட்பு நடை பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரி உத்தரவு பிறப்பித்திருந்தார். கட்சி நிறுவனர் ராமதாஸ் அனுமதி இல்லாமல் நடத்தப்படக்கூடிய இந்த நடைப்பயணத்தால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனுமதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள இருந்த அன்புமணிக்கு முதல் நாளே சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், அன்புமணியின் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கவில்லை என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில், “அன்புமணி ராமதாஸின் ‘தமிழக உரிமை மீட்பு பயணம்’ திட்டமிட்டபடி தொடரும். அதற்கு காவல்துறை தடை விதிக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது” என்று அந்த விளக்க கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த கடிதத்தில், பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ், தனது அனுமதியின்றி தனது கட்சியின் பெயரை குறிப்பிட்டு யாரும் நடைபயணம் மேற்கொள்ளவோ, மக்களை சந்திக்கவோ கூடாது என்றும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரலாம் என புகார் அளித்திருப்பதாகவும், எனவே அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து காவல் ஆணையர்களும், காவல் கண்காணிப்பாளர்களும், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் அன்புமணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், “அன்புமணியின் நடை பயணம் திட்டமிட்டபடி தொடரும். நீதிமன்றத்தை நாட அவசியம் இல்லை. நடை பயணத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. எவ்வித மாற்றமும் இல்லாமல் நடைபயணம் தொடரும்” என்றும் வழக்கறிஞர் பாலு தகவல் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %