கவின் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவருடைய தோழி தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தானும் கவினும் உண்மையாகவே காதலித்ததாகவும், இந்தக் கொலையில் தனது பெற்றோருக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலைப் பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சுர்ஜித்தின் தந்தையும் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார். ஆனால், குற்றவாளியான சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கோரிக்கையை முன்வைத்து கவினின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் 5 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கவினின் உடலைப் பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.