பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி, யூடியூபர்கள் கோபி – சுதாகர் வெளியிட்ட ஆணவ படுகொலை வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சமூக பதற்றத்தை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.
ஆணவப் படுகொலைகளை மையப்படுத்தி யூடியூபர்கள் கோபி – சுதாகர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பிரபல தயாரிப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை கவின் படுகொலை சம்பவத்துக்கு பிறகு, ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது. யூடியூபில் பரிதாபங்கள் என்ற சேனல் மூலம் தனித்துவமான வீடியோக்களை போட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வருபவர்கள் சுதாகர் மற்றும் கோபி. இவர்கள் ஆணவப் படுகொலைகளை மையப்படுத்தி சில தினங்கள் முன் வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். சோஷியல் பரிதாபங்கள் என்ற பெயரில் ஆணவப் படுகொலையை ஆதரிப்பவர்களுக்கு பளார் விடுவது போன்று அந்த வீடியோ அமைந்திருப்பதாக பார்ப்பவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக நெல்லை கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வெளிப்படையாகவே பேசினார்கள் என்றும் சாதி வெறியர்கள் தங்கள் சாதியில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை எப்படி எல்லாம் கொலையாளிகளாக மாற்றுகிறார்கள் என்பதையும் கோபி – சுதாகர் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், சாதி வெறியர்களின் ஆதிக்க மனோநிலையை எடுத்துக்காட்டிய அந்த வீடியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. குறிப்பாக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி கடும் எதிர்வினை தெரிவித்துள்ளார். இந்த ஏ.எம்.சௌத்ரி என்பவர் தேசியத் தலைவர் என்கிற படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், கோபி, சுதாகர் குறித்து ஏ.எம்.சௌத்ரி வெளியிட்டுள்ள வீடியோவில், “சமுதாய ரீதியாக கருத்து தெரிவிக்க கோபி, சுதாகருக்கு யார் உரிமை கொடுத்தது. குருபூஜையைப் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் கேலி, கிண்டல் செய்துள்ளனர். சுர்ஜித் கைதால் நாங்க சோகத்தில் இருக்கிறோம். அவர் கொலையாளி ஆன வேதனையில் இருக்கிறோம்” என்று கூறி கோபி, சுதாகரை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.