உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அப்போது சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகரர் சாமி சிதம்பரம் பகுதிகளில் உள்ள தச தீர்த்த குளங்களுக்கு செல்வார்.
அங்கு சந்திரசேகரர் சாமி முன்னிலையில் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் சாமிக்கு, நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து, சாமி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கிள்ளை கடற்கரை, அம்மாபேட்டை புலிமேடு தீர்த்தக் குளம், இளமையாக்கினார் கோவில் வியாக்ர தீர்த்தம் குளம், சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி தீர்த்தம், சிங்காரத்தோப்பு பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவிலில் சிவப்ரியை தீர்த்தம், புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற்கடல் தீர்த்தம் ஆகிய தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி உற்சவம் முடித்துவிட்டு,
இறுதியாக நடராஜர் கோவில் சித்சபை அருகே உள்ள ஸ்ரீ நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு பரமானந்த கூட தச தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. முன்னதாக அனந்தீஸ்வரன் கோவில் அனந்த தீர்த்த குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து நடராஜர் கோவிலில் நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.