சிதம்பரம் அருகே கூடு வெளிசாவடி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி புதியதாக பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தமிழக முதல்வர் நேரடியாக இதை திறந்து வைப்பார் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் தற்காலிகமாக சித்த மருத்துவ சாலை அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இந்த பாலிடெக்னிக் கல்லூரியை கொரோனா பிரச்சனை முடிந்து தமிழக அமைச்சர்கள் தலைமையில் திறக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த கூடுவெளி பாலிடெக்னிக் கல்லூரியை கல்லூரி நிர்வாகிகள் இன்று கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சொல்லாமலும் கடலூர் மாவட்ட அமைச்சர் மற்றும் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் சொல்லாமல் பாலிடெக்னிக் கல்லூரியை அவசர அவசரமாக வாழை தோரணம் கட்டி கணபதி ஹோமம் செய்து திறந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாலிடெக்னிக் வளாகத்தில் செயல்பட்டு வந்த கூடு வெளி பாலிடெக்னிக் கல்லூரி முழுவதையும் மேற்கண்ட புதிய கட்டிடத்தில் மாற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளனர். பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியை எவருக்கும் தகவல் சொல்லாமல் அவசர அவசரமாக திறக்க காரணம் என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகிகள் மீது விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சப் கலெக்டர் அந்தப் தொகுதி மக்கள் பிரதிநிதி யாருக்கும் தகவல் சொல்லாதது ஏன் என்பது மர்மமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.

