பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி உலக தலைவர்கள் முதல் இந்தியத் தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனது 75-ஆவது பிறந்த நாளை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொண்டாடி வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத்தின் Mehsana மாவட்டத்தில் உள்ள வட்நகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது 8 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த பிரதமர் மோடி, பின்னர் 1985ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தனது சீர்மிகு நடவடிக்கைகளால் 1998ஆம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கண்டது எல்லாம் வெற்றி முகம் தான். 2001ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த அவர், 2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 1984ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 2014 முதல் இன்று வரை தொடர்ந்து 3 முறை பிரதமராக தேர்வான பிரதமர் மோடி, இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட நாட்கள் பிரதமர் பதவி வகிக்கும் காங்கிரஸ் அல்லாத முதல் தலைவர் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி உலக தலைவர்கள் முதல் இந்தியத் தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சிஆர் பாட்டீல், மகராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மேலும், பிரபல கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அணிந்து இருந்த ஜெர்சியில் கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பி உள்ளார்.
அதேபோல், டெல்லி கல்வி அமைச்சகம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி 21 மொழிகளில் சிறப்பு பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.