சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு – மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.