பதவிக்காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த வேல்ராஜ், நேற்றுடன் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், நேற்றுடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2021-24 ஆண்டுகளில் துணைவேந்தராக வேல்ராஜ் பதவி வகித்தார். மொத்தம் 3 ஆண்டுகள் அவர் பதவி வகித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரின் பதவிக்காலம் முடிவடைந்தது. தொடர்ந்து பதவிக்காலம் முடிந்ததால் பேராசிரியராக பணியாற்றினார். அதேநேரம், புதிய துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வேல்ராஜ் துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில், அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மேலும், துணைவேந்தராவதற்கு முன்பாக இயந்திரவியல் துறையின் கீழ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எனர்ஜி ஸ்டடிஸ் துறையில் பணியாற்றினார். அப்போது அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், வேல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பதவிக்காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த வேல்ராஜ், நேற்றுடன் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு சஸ்பெண்ட் உத்தரவு நகல் வேல்ராஜிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை அடுத்து வேல்ராஜின் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது. சஸ்பெண்ட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே அவரின் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.