அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடலூர் மாவட்டத்தில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் படுஜோராக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை.
இதனால் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து, உடனடியாக கைது செய்யும்படி மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீசாருக்கு, சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்ததாக 25 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தியதில், 56 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 61 பேரை கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read Time:1 Minute, 58 Second