UPI transaction limit | NPCI யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. காப்பீடு, பயண முன்பதிவு, முதலீடு, நகை வாங்கல் உள்ளிட்ட சேவைகளுக்கு இன்று முதல் புதிய வரம்பு அமலாகிறது.
யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுபிஐ மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் நாள்தோறும் மேற்கொள்ளும் பண வரித்தனைகளில் யுபிஐ இன்றியமையாததாக மாறிவிட்டது. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை, NPCI என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கட்டண கழகம் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, இன்று முதல் தனிநபர்கள், வணிகம் சார்ந்து மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு, மூலதன சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு 6 லட்சம் ரூபாயாகவும், கடன் மற்றும் மாதத் தவணைகளை செலுத்துவதற்கான வரம்பு 10 லட்சம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ மூலம் நகைகளை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 24 மணிநேரத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, வங்கியில் இருப்பு வைப்பதற்கு யுபிஐ மூலம் ஒரு நாளில் 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம். அதே சமயம், தனிநபர்களுக்குள் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ஒரு லட்சமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.