0 0
Read Time:3 Minute, 18 Second

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் பரப்புரை பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.

சினிமாவில் இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் போன்றவர்கள் தங்கள் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தினார்கள். இதனால், விஜயும் அவர்கள் வழியிலேயே மதுரையில் தனது முதல் மாநாட்டை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், விஜயின் வியூகம் வேறாக அமைந்தது. தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு, கொங்கு, டெல்டா என 4 மண்டலங்களாக பிரித்து, அதன் அடிப்படையில் தங்களுடைய அரசியல் நிகழ்வுகளை கட்டமைப்பது என தவெக முடிவெடுத்தது. அதன் படி, யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல் மாநில மாநாட்டை வடக்கு மண்டலத்தை குறி வைத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் நடத்தினார்.

இதையடுத்து, விஜயின் பார்வை கொங்கு மண்டலம் பக்கம் திரும்பியது. கடந்த ஏப்ரல் மாதம் கோவையில் பூத் கமிட்டி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் கோவை சென்றார். அங்கு, திடீரென்று விஜய் ரோட் ஷோ சென்றது பரப்புரை பயணத்திற்கான ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

வடக்கு மற்றும் கொங்கு மண்டலத்தை கவர் செய்த விஜய், தென் மண்டலத்தை குறி வைத்து, தனது 2 ஆவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார். 3 மண்டலங்களில் 3 நிகழ்வுகளை நடத்திய விஜய், அடுத்தக்கட்டமாக டெல்டா மாவட்டத்தை மையப்படுத்தி தனது அடுத்த கட்ட அரசியல் நகர்த்தியுள்ளார். திருச்சியில் பரப்புரையை தொடங்கும் விஜய், என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் இருப்பதாக பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 3 மாவட்டங்களுக்கு செல்லும் விஜய், திருச்சியில் தொடங்கி மதுரையில் முடிக்கும் வகையில் பரப்புரை பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விஜய் வகுத்த வியூகம், வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து இருந்து பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %