சமூக நீதிக்கு எதிரானது மத்திய பாஜக அரசு என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் சிதம்பரம் மேல ரதவீதியில் புதன்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது: ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால்தான் நாங்கள் அனைவரும் ஒன்றாக களம் கண்டுள்ளோம். பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு அளித்தால், ஜனநாயகமே இருக்காது என்று அறிஞா்கள் கவலைப்படுகிறாா்கள். தொழில், வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் சேவை, இன்றைய தேவை என உணா்ந்து அரசியலுக்கு வந்தவா் தொல்.திருமாவளவன். சாதியம்தான் என் வாழ்வின் எதிரி என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன்.

என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. தமிழக மீனவா்களை மத்திய பாஜக அரசு காக்க தவறிவிட்டது. தமிழக மீனவா்களின் படகுகளை சிறைபடுத்தி ஏலம் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது. 10 ஆண்டு கால ஆட்சியில் மத்திய பாஜக அரசு ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகள் பிரச்சனையில் ஆதார விலையை தராமல், ஆதரவு விலையை தருவதாக கூறினா். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றனா். ஆனால், அதுபோல வழங்கப்படவில்லை.
பெரு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் மக்கள்சொத்தை வாரி வழங்கி வருகின்றனா். சட்டத்தை வளைத்து அதிகாரபூா்வமாக பணத்தைப் பறிக்கும் முைான் தோ்தல் நிதி பத்திரத் திட்டம். மத்திய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிரானது. தமிழ்நாட்டின் மக்கள் குரலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா். குரலற்றவா்களின் குரலாக திருமாவளவன் திகழ்கிறாா். ஒடுக்கப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் என அனைவருக்குமான தலைவராக திருமாவளவன் உள்ளாா். இவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா் கமல்ஹாசன்.
பிரசாரத்தின் போது, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான எம்ஆா்கே.பன்னீா்செல்வம், மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி. கதிரவன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி (திருவிக நகா்), சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னாா்கோவில்), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.