0 0
Read Time:6 Minute, 54 Second

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

இந்தப்படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம், நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கும் 1998-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 1999-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு 1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் கருணை மனுக்களை ஆளுநர் பாத்திமா பீவி 1999-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.

இதனையடுத்து கடந்த 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 2000-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை அப்போதைய குடியரசுத்தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். இதன்பின்னர் பதவியேற்ற குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், 2011-ஆம் ஆண்டு இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

11 ஆண்டுகளுக்கு மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி எழுவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகி மத்திய அரசு தடையாணை பெற்றது.

இந்த வழக்கு மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது.

இதன் பின்னர் 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது இதனிடையே உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால், பரோலில் வந்த பேரறிவாளன், தொடர் சிகிச்சை பெற வேண்டி, 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது. மார்ச் 9-ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், விசாரணை வரம்பு தமிழ்நாடு எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும், ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தற்போது பலரும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

You missed