மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்-குழு விளையாட்டு போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கிவைத்தார். தடகள போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி ஆகிய போட்டிகளும் நடந்தன.
மேலும் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தி சுவாதினம் முற்றிலும் இல்லாதவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், டென்னிஸ் பந்து எறிதல் மற்றும் நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடந்தது.
இதேபோல் புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், காது கேளாதோருக்கு 100 மீட்டர் ஒட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடந்தது.
குழு விளையாட்டு போட்டியில் கை, கால் ஊனமுற்ற ஆடவர் மற்றும் மகளிருக்கு இறகுபந்து போட்டி,மேசைப்பந்து போட்டி, கண்பார்வையற்ற ஆடவர் மற்றும் மகளிருக்கு அடாப்டட் கைப்பந்து, மன நலம் பாதிக்கப்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கு எறிபந்து போட்டி, காது கேளாத ஆடவர் மற்றும் மகளிருக்கு கபாடி போட்டியும் நடந்தது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில் உதவி கலெக்டர் பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா, மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.