’’கடலூர் டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமாரின் செயல்பாடுகளில் பணியாளர் நலனும் இல்லை, நிர்வாக நலனுமில்லை சுயநலம் மட்டுமே கொண்டு அவருக்கான வருமானத்தை மட்டும் எல்லா பக்கங்களிலிருந்தும் பெருக்குகிறார்’’
கடலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருக்கும் ரவிக்குமாரை கண்டித்து கடலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மேலாளராக உள்ள ரவிக்குமார் ஊழல், மோசடி செயல்களில் ஈடுபட்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
கடலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களை இழிவாக நடத்தும் மேலாளர் ரவிக்குமார் மீது இதற்கு முன் பல முறை புகார் குடுத்தும் இவரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அதன் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளருக்கு எதிராக ஒன்பது கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலாளர் ரவிக்குமார் ஆய்வு என்ற பெயரில் தனக்கு வளைந்து குடுக்காத பணியாளர்களின் கடைகளுக்கு சென்று அவர்களை பழிவாங்குவதாகவும், அவ்வப்போது பணியாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ள டாஸ்மாக் ஊழியர்கள், பணியாளர்களை காரணமின்றி இழிவாக பேசி அவமானப்படுத்தி மிரட்டுவது. அவர் வழக்கமாக கடைகளுக்கு ஆய்வுக்கு சென்று அவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
கேட்ட லஞ்சத்தை தந்த பின்பும் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தராமல் மறுப்பவர்கள் மீது போலி அறிக்கை தயார்செய்து பணியாளர்களை இடமாற்றம் செய்வது, மேலாண்மை இயக்குநர் அவர்களின் பணியிட மாறுதல் விதியை புறக்கணிப்பது, டாஸ்மாக் சட்ட விதிக்கு புறம்பாக அவராக தற்காலிக பணியிட மாறுதல் வழங்குவது உள்ளிட்ட செயல்களில் டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

கடலூர் டாஸ்மாக் நிறுவனத்தின் விதிமுறைகளை தனக்கென மாற்றிக்கொண்டு அதிகாரம் செய்து பணியாளர்களை இழிவாக நடத்தும் மேலாளர் ரவிக்குமார் மீது டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் கடலூர் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களை திரட்டி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் ஊழியர்கள் கூறி உள்ளனர்.