பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா IMF -ஐ அணுகவுள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்
‘அபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் கலோனல் சோபியா குரேஷி , விங் கமாண்டர் வியாமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்ரம் மிஸ்ரி,
“பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு முதல் இந்திய ராணுவ தளங்களையும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முற்பட்டு வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
நமது பொதுமக்கள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதியிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்கள், குருத்துவாராக்கள், கோயில்கள் , கல்வி நிலையங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று இது போன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கிறிஸ்தவ பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு சில குறிப்பிட்ட கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தானின் செயல் மிகவும் கீழ்த்தரமானது.
இவ்வாறு தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்து வருவது கேலிக்கூத்தானது. பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா IMF -ஐ அணுகவுள்ளது. பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்துவதற்கான முயற்சியை இந்தியா முன்னெடுத்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தானின் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை தாக்குவதாக தவறான தகவலை எடுத்துரைத்து வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளன” என தெரிவித்தார்.