தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக தொழிலாளர் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் இன்று(மே.02) நடைபெற்றது.
தொழிலாளர் துறை ஆணையாளர் சி.அ.ராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையாளர்கள், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாநகராட்சி ஆணையர், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் மற்றும் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களிடம் ரூ.2000 அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும், கேட்டரிங் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காவிட்டால், தமிழ்நாடு கேட்டரிங் நிறுவணங்கள் சட்டப்படி ரூ.500 வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.