ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். கா்நாடகம், கேரளம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் உள்பட 26 போ் கொல்லப்பட்ட இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.
பிரதமா் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழுக் கூட்டத்தைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக கடுமையான பதிலடி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
அட்டாரி-வாகா எல்லை மூடல், கடந்த 1960-ஆம் ஆண்டின் சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம், சாா்க் விசா (நுழைவு இசைவு) விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து, அட்டாரி-வாகா எல்லை வழியாக நாட்டிற்குள் நுழைந்த அனைத்து பாகிஸ்தானியர்களும் மே 1 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதேநேரம், பாகிஸ்தானைச் சோ்ந்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால விசாக்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் கூடிய விரைவில் நாடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் வியாழக்கிழமை அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் தனது வான்வெளியை மூடுவதாகவும், பாகிஸ்தான் வழியாக மூன்றாம் நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் வா்த்தகம் உள்பட இந்தியா உடனான அனைத்து வகையான வா்த்தகமும் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.

சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிகாரில் வியாழக்கிழமை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவா்களின் ஆதரவாளா்களையும் அடையாளம் கண்டு, தேடிப் பிடித்து, தண்டனை வழங்குவோம். உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் அவா்களை விடமாட்டோம். இந்தியாவின் ஆன்மாவை பயங்கரவாதத்தால் சீா்குலைக்க முடியாது. பயங்கரவாதத்தை தண்டிக்காமல் விடப் போவதில்லை. விரைவான வளா்ச்சிக்கு அமைதியும் பாதுகாப்பும் இன்றியமையாதவை. எனவே, எஞ்சியிருக்கும் பயங்கரவாதிகளையும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மோடி உறுதியளித்தார்.
இதனிடையே பங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் ஆதில் ஹுசைன் டோக்கா், சதித் திட்டம் தீட்டியதாக ஆசிஃப் ஷேக் ஆகிய இரு லஷ்கா் பயங்கரவாதிகளின் வீடுகளில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களையும், அண்டை வீட்டினரையும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா். அப்போது, வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் தகா்க்கப்பட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம் என்று இந்தியா கூறியதைத் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ராணுவம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.