26 ஆம் தேதி தவெக பொதுக்குழு.. கூட்டத்தை கட்டுப்படுத்த விஜய் கட்சி நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மாவட்ட வாரியாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு ஆனதை விழாவாக கொண்டாட கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதன்படி வரும் 26 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது, அவர் வந்து செல்வதற்கான பாதைகள், வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்டவற்றை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று ஆய்வு செய்தார்.
2000 பேருக்கு மட்டுமே அனுமதி? பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் என்ற தனியார் சொகுசு விடுதியில் விழா நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் பேசினார். கட்சி நிர்வாகிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கான பாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விஜய் வந்து செல்வதற்கான பாதை, சுமார் 2000 பேருக்கு சைவ, அசைவ உணவு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக முதலாம் ஆண்டு விழாவில் 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யை பார்க்க அதிகளவில் கூட்டம் திரளும் என்பதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் என 2000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுமதி சீட்டு இல்லாதவர்கள் விழாவில் பங்கேற்க அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இதுவரை 67 படங்களில் நடித்துள்ள விஜய் தற்போது 68வது படமாக ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் தன் இலக்கு என்றும், 68வது படம் தான் என் கடைசி படம் என்றும் அறிவித்தார்
விஜய் கட்சி தொடங்கியதை அடுத்து படிப்படியாக அரசியல் நகர்வை எடுத்து வருகிறார். கட்சிக்கான பாடல், கட்சிக்கொடி, கட்சி மாநாடு, கட்சிக்கான கொள்கை, யார் அரசியல் எதிரி என எல்லாவற்றையும் படிப்படியாக அறிவித்தார். தற்போது கட்சியை பலப்படுத்துவதற்காக மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் என அடுத்தடுத்து பிசியாகவே இருந்து வருகிறார். விரைவில் மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.