திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.பி திருச்சி சிவா ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருச்சியில் டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றபோது, திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், எதிர் முழக்கமிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், திருச்சி சிவா வீட்டிற்கு சென்று கார் மற்றும் வீட்டின் ஜன்னல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே காவல்நிலையத்திலும் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், ராமதாஸ் ஆகியோரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
திமுகவின் இருதரப்பு நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தாக்குதல் நடத்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூட்டத்தை சேர்த்தல், கலவரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் நால்வரையும், திருப்பதி என்பரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.